தொட்டியம் அருகே ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தொட்டியம் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

Update: 2018-06-02 22:45 GMT
தொட்டியம்,

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை கொண்டாம்வாரி பாலம் அருகே கடந்த மாதம் 29-ந்தேதி ஊட்டச்சத்து மாவு ஏற்றி வந்த லாரியை வழி மறித்து மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக லாரியை ஓட்டிவந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விவேக் என்பவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட லாரி திருச்சி அருகே மீட்கப்பட்டது. ஆனால் லாரியில் பொருட்கள் எதுவும் இல்லாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தொட்டியம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் லாரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட (ஊட்டச்சத்து மாவு அடங்கிய பாட்டில்கள்) பொருட்கள் பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள குடோனில் உள்ளதாக முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புகையிலை பொருட்கள்

உடனே போலீசாருடன் அவர் குடோனுக்கு நேரில் சென்றார். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் குடோனில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் குட்கா, பான்மசாலா, பாக்கு போன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் தொட்டியம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் மீட்கப்பட்ட லாரியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொட்டியம் போலீஸ் நிலையத்துக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொட்டியம் விஸ்வநாதன், முசிறி முத்துகுமாரசாமி, திருச்சி அழகுபாண்டியன், கார்த்திகேயன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆய்வு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்