தடை காலம் எதிரொலி: குளச்சல் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது

மீன்பிடி தடை காலம் தொடங்கியதை அடுத்து குளச்சல் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2018-06-02 22:45 GMT
குளச்சல்,

ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அத்துடன், அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரைக்கு ஏற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று மதியம் கரை திரும்புவார்கள்.

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இவர்களுக்கு உயர்ரக மீன்களாகிய இறால், புல்லன், கேரை, சுறா போன்ற மீன்கள் கிடைக்கும். இந்த மீன்களை மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்துக்கு எடுத்து சென்று ஏலம் விடுவார்கள். அவற்றை உள்ளூர், வெளியூர் வியாபாரிகளும், கேரளாவை சேர்ந்தவர்களும் போட்டிப்போட்டு வாங்கி செல்வார்கள்.

தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே படகுகள் நங்கூரம் போட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குளச்சல் துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன், சந்தைகளில் மீன்வரத்து குறைந்து, மீன் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்