கோடை விடுமுறை முடிந்து அரசு, தனியார் பள்ளிகள் இன்று திறப்பு மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆய்வு

புதுவையில் கோடை விடுமுறை முடிந்து அரசு, தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Update: 2018-06-02 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுதேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது விடுமுறை முடிவடைந்து புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. ஒருசில தனியார் பள்ளிகள் 6 மற்றும் 13–ந் தேதிகளில் திறக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை வழங்கி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடன் புத்தகம், சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக போக்குவரத்து துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் முகாம் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக ஊர்தி முனையத்தில் நடந்தது. வாகனங்களை ஆய்வு செய்யும் முகாமை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரகுநாத், சீத்தா ராமராஜூ, பிரபாகர்ராவ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது மஞ்சள் பெயிண்டு, வாகனத்தில் பள்ளியின் பெயர் உள்பட 13 விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? என சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அவற்றை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து மீண்டும் கொண்டு வந்து அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லாத வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அனுமதி வழங்கியதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2–வது நாளாக நடைபெற உள்ளது. அடுத்த கட்டமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் கூறும் போது, புதுவையில் மொத்தம் 930 பள்ளி வாகனங்கள் உள்ளன. தொடர்ந்து ஆய்வு செய்து வாகனத்தின் உறுதி தன்மை அறிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வாகனங்கள் வேகமாக செல்வதாக புகார்கள் வருகின்றன. எனவே வேகத்தை கண்டறியும் கருவி (ஸ்பீடு கன்) வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்