நிதிநிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்.
மதுரை,
மதுரை எஸ்.எஸ்.காலனி காஜிமார் காம்ளக்சில் பிளசிங் ஆக்ரோ பார்ம்ஸ், பிளசிங் ஆஸ்செட் புரோமோட்டர்ஸ், பிளசிங் பேமிலி லைப் கேர், பிளசிங் பெட் மெனுபேக்சர் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்களான இன்னாசிபிள்ளை, லூர்து பிள்ளை, ஜோசப் ஜெயராஜ், எல்ஷடாய் லூர்து பிள்ளை, சந்தான பீட்டர், இருதயராஜ், மாணிக்கம்பிள்ளை, ஜெயபாலன், பிரகாசம் சகாய பாக்கியசாந்தி உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து இந்த நிதி நிறுவனங்களை நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எனவே அந்த நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை விஸ்வநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களை காட்டி புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.