மதுரை மாவட்டத்தில் 60 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர் கலெக்டர் வீரராகவராவ் பேச்சு
மதுரை மாவட்டத்தில் 60 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர் என்று கலெக்டர் வீரராகவராவ் பேசினார்.
மதுரை,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசால் பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நான் பள்ளி கல்வி படிக்கும் போது பள்ளிகள் திறந்த முதல் நாளில் புத்தகம் வழங்கப்படுவதில்லை. புதிய புத்தகம் கிடைக்க குறைந்தது ஒரு மாதம் ஆகும். அதுவரை பழைய புத்தகம் கொண்டு தான் கல்வி பயின்றோம்.
தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், பள்ளிப்பை, ஜியாமெட்ரிக் பாக்ஸ், சீருடை, காலணி, சத்தான உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பிளஸ்–1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியும், பிளஸ்–2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்படுகிறது. இதனை உரிய முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும். அனைத்து மாணவ, மாணவியர்களும் பள்ளி படிப்பு மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 135 பள்ளிகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 907 பேர் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில் 60 சதவீத மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் தான் படிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மிக கடினமான தேர்வாக கருதப்படுவது ஆசிரியர்களுக்கான தேர்வு தான். இந்த தேர்வில் வெற்றி பெற்ற தரமான ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நியமிக்கப்படுகின்றனர். ஆகவே அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே தகுதிவாய்ந்த, தரமான ஆசிரியர்கள் ஆவர். கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வியினை படித்து வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் வீடு, பயிலும் பள்ளி வளாகங்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாநகராட்சி கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.