விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கும் அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருதுநகரில் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2018-06-02 22:30 GMT

விருதுநகர்,

மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நகர் மெயின்பஜார் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். தேசிய நெடுஞ்சாலை பகுதியாக இருந்த மெயின் பஜார் தற்போது மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆவணங்களின் படி மெயின்பஜார் 60 அடி அகலம் உள்ள சாலையாகும். ஆனால் தற்போது ஆக்கிரமிப்புகளால் மெயின் பஜார் 20 அடி குறுகிவிட்டது. அதிலும் மெயின்பஜாரின் இருபுறமும் தற்காலிக ஆக்கிரமிப்புகளும் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு மெயின் பஜாருக்குள் செல்வதற்கே சிரமப்படும் நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் காலை நேரங்களில் மெயின் பஜாரில் உள்ள மார்க்கெட் பகுதியில் சரக்கு வாகனங்களும் ஆக்கிரமித்து கொள்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதுதவிர மதுரையில் இருந்து நகருக்குள் நுழைவதற்கான மதுரை சாலையிலும், நகராட்சியின் இதர சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் விபத்து நிகழும் நிலையும் ஏற்படுகிறது. காய்கறி மார்க்கெட் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

வழக்கமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய முன்னறிவிப்பு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதை சுட்டிகாட்டிய பிறகும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டும் நிலை இருந்து வருகிறது. சில அதிகார மையங்களின் தலையீட்டினால் இவ்வாறு தயக்கம் காட்டப்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்தாலும், முன் அனுமதி இன்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினாலும் அதை கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே உள்ளனர். இதுகுறித்து நகராட்சியின் நகர அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முடங்கியே உள்ளனர். இதனால் நகராட்சி இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் தனி நபர்களுக்கு நகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் நகர் மக்களுக்கு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்