ஊட்டியில் பழங்குடியினரின் கைவினை பொருட்கள் கண்காட்சி

ஊட்டியில் பழங்குடியினரின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2018-06-02 22:00 GMT

ஊட்டி,

இந்திய அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில், பழங்குடியினரின் கைவினை பொருட்கள் கண்காட்சி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சியை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியினர்கள் தயாரித்த கைப்பைகள், ஓவியங்கள், உலோக பொருட்கள், பரிசுப்பொருட்கள், துணி வகைகள், அணிகலன்கள் போன்றவை இடம் பெற்று உள்ளன. 5 வகை உலோக பொருட்களால் ஆன நந்தி, ஆமை, கதவு கைப்பிடி, பழங்குடியினர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட தோடர் இன மக்களின் எம்பிராய்டரி பொருட்களும் இடம் பெற்று உள்ளது. மேலும் கண்காட்சியில் வனத்துறை சார்பில் நீலகிரி தைலம், தேயிலைத்தூள், காட்டுத்தேன் வைக்கப்பட்டு உள்ளது. பழங்குடியினரின் கைவினை பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழங்குடியினர்களின் கைவினை பொருட்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளவும், அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கண்காட்சி வருகிற 10–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக கைவினை பொருட்களை பார்வையிடலாம். கண்காட்சியின் நுழைவு பகுதியில் சத்தீஷ்கர் மாநிலத்தில் வாழும் கடவா பழங்குடியின மக்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் செய்திகள்