வால்பாறை சிங்கோனா எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிக்க கோரி தொழிலாளர்கள் முற்றுகை

வால்பாறை சிங்கோனா எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிக்க கோரி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-06-02 22:15 GMT

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள டேன்டீ நிர்வாகத்திற்கு சொந்தமான சிங்கோனா, பெரியகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப்புலி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு டேன்டீ நிர்வாகமும், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டேன்டீ எஸ்டேட் தொழிலாளர்கள் டிவிசன் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டேன்டீ எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:– சிங்கோனா, பெரியகல்லார், நீரார், பத்தாம்பாத்தி, ரயான், சின்னக்கல்லார் உட்பட பல்வேறு எஸ்டேட் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்ட டேன்டீ எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகள் உள்ளன.

இந்த எஸ்டேட் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக வனவிலங்குகளின் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. இதனால் இது வரை கிட்டத்தட்ட 13 பேர் இறந்து போயுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சிங்கோனா சுற்றுவட்டார பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட எஸ்டேட் பகுதியாக உள்ளது. இதனால் டேன்டீ எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள புதர் செடிகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. அவசர காலங்களில் செல்வதற்கு சாலைவசதிகள் கிடையாது இருக்கின்ற சாலைகள் முழுவதும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியில்லாத நிலைக்கு மாறி பல ஆண்டுகளாகிவிட்டது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதிக்கு கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துதருவதற்கு பல முறை கோரிக்கை வைத்தும், எங்களது பகுதியின் முன்னால் கவுன்சிலர் நகராட்சி மன்றக் கூட்டத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறையினரும் கூடுதலான பணியாட்களை பணிக்கு அமர்த்தி போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், டேன்டீ நிர்வாகம் சார்பில் எங்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் எதுவுமே செய்துதரவில்லை எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இந்த பகுதியில் நடமாடிவரும் சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு வேலைக்கு செல்வோம்.

முற்றுகை போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி, மானாம்பள்ளி வனச்சரகர் சேகர், டேன்டீ டிவிசனல் மேலாளர் சிவக்குமார் ஆகியோரிடம் டேன்டீ தொழிலாளர்கள் மற்றும் அந்த பகுதியின் முன்னாள் கவுன்சிலர், தொழிலாளர்கள் பிரதிநிதி ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து டேன்டீ நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்துதருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக டிவிசனல் மேலாளர் தெரிவித்தார். மாவட்ட வனஅலுவலர் உத்தரவின்பேரில் மானாம்பள்ளி வனச்சரகம் சார்பில் இரண்டு இடங்களில் கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சிறப்பு வனக்குழு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக வனச்சரகரும் உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து 2 மணிநேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளர்கள் காலை 10 மணிக்கு வேலைக்குத் திரும்பினார்கள். பின்னர் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சிங்கோனா பகுதிக்கு சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு இரண்டு கூண்டுகளை கொண்டு வந்தனர். சிறுத்தைப்புலியின் நடமாட்டம் உள்ள இடத்தில் இரவு நேரத்தில் கூண்டை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். சிங்கோனா பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் தெருவிளக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 25–ந் தேதி பெரியகல்லார் பகுதியில் சிறுமி சத்யாவையும், நேற்று முன்தினம் சந்திரமதி என்ற பெண் தொழிலாளியையும் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் மாலைநேரம், அதிகாலை நேரம், நள்ளிரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் மட்டுமல்லாமல் புலிகளும் நடமாடி வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்