திண்டுக்கல்லில் பிறந்து 5 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மருத்துவமனைக்குள் வீச்சு

பிறந்து 5 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குள் வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-02 22:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவுக்கு துணியால் மூடியபடி ஒரு பச்சிளம் குழந்தையுடன் 4 பெண்களும், ஒரு ஆணும் வந்தனர். திடீரென அவர்கள் அந்த குழந்தையை ஆண்கள் சிகிச்சை பிரிவின் வாசல் அருகே தரையில் போட்டுவிட்டு வேகமாக புறப்பட்டனர்.

இதைப்பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் அவர்களை நிற்குமாறு கூறினர். ஆனால், அவர்கள் நிற்காமல் மருத்துவமனையைவிட்டு வெளியே தப்பி ஓடிவிட்டனர். உடனே, அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை தூக்கி பார்த்தனர். அது ஆண் குழந்தை என்பதும், பிறந்து சில மணி நேரங்களே ஆனதும் தெரியவந்தது.

மேலும், குழந்தையின் தொடையில் லேசான வீக்கமும் இருந்தது. உடனே குழந்தையை மீட்டு சிசு பராமரிப்பு பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அங்கு வந்த மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் குழந்தையை பார்வையிட்டார். பின்னர் அந்த குழந்தைக்கு தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:–

அந்த ஆண் குழந்தை 1 கிலோ 700 கிராம் எடை உள்ளது. குழந்தை பிறந்து 5 மணி நேரமே இருக்கும். அதன் கையில் 45 என்ற எண்ணுடன் கூடிய டோக்கன் கட்டப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வெளியே ஏதோ ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

குழந்தையின் தொடையில் லேசான வீக்கம் இருக்கிறது. இதனால் அதற்கு தனிக்கவனம் செலுத்தி பராமரிக்க உத்தரவிட்டுள்ளேன். காயம் சரியாகி நல்ல நிலைக்கு வந்தவுடன், குழந்தையை சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவோம். பின்னர், அவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்து பராமரிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் மருத்துவமனையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான உறவால் குழந்தை பிறந்ததால், அதனை கொண்டு வந்து வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்