திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உயர் வகுப்பு காத்திருப்பு அறையை பயன்படுத்த கட்டணம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள உயர் வகுப்பு காத்திருப்பு அறையை பயன்படுத்தும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதனை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2018-06-02 22:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து கரூர், திருச்சி, பழனி ஆகிய பகுதிகள் வழியாக ரெயிலில் செல்ல வசதியாக 3 ரெயில் பாதைகள் உள்ளன. திண்டுக்கல், தேனி பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினமும் சுமார் 70 ரெயில்கள் நின்று செல்கின்றன.

ரெயிலில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் 3–வது நடைமேடையில் காத்திருப்போர் அறை உள்ளது. ரெயிலில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்ய காத்திருப்பவர்களும், நள்ளிரவு நேரத்தில் ரெயில்களில் வரும் பயணிகளும் இந்த அறையை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த காத்திருப்பு அறையை தனியார் வசம் ஒப்படைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் அந்த அறையை பராமரிக்கும் பணியையும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அந்த அறையை பயன்படுத்தும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

ரெயில்வே நிர்வாகம் மூலம் அதற்கான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட்டுள்ளது. இதற்கு 2 பேர் விண்ணப்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் அந்த காத்திருப்பு அறையை ரெயில் பயணிகள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, ரெயில்வே துறையை மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தான் காத்திருப்பு அறையை தனியார் வசம் ஒப்படைக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் இலவசமாக குடிநீர் பிடித்துக்கொள்ள வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெரும்பாலான ரெயில் நிலையங்களில் தனியார் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ரெயில் நிலையத்திலும் தனியார் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுவதால், இங்குள்ள குழாய்களில் குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீர் தான் வருகிறது. இதனால் வேறு வழியில்லாமல் குடிநீரை விலைக்கு வாங்கி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சியை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்