சேலம் அருகே பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை

சேலம் அருகே வீட்டில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-06-01 23:30 GMT
சேலம்,

சேலம் எருமாபாளையம் அருகே உள்ள பனங்காடு ஏரிகரையை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பார்வதி (வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பார்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் பார்வதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர்.

அழுகை சத்தம் கேட்டதும் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஏராளமானவர்கள் பார்வதி வீட்டின் முன்பு கூடினர். பின்னர் இது குறித்து கிச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, இன்ஸ்பெக்டர்கள் குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பார்வதி பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரிடமும் விசாரித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் பார்வதி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வதி பிணத்தை பார்த்த போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. பின்னர் விசாரணையில் அவர் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் அவரது கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள காயங்கள் எறும்புகள் கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்று உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மிகவும் சோர்வாக இருந்து உள்ளார். பின்னர் இரவு படுக்கச்சென்ற அவர் படுக்கையிலேயே இறந்து இருக்கலாம். இருந்தாலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்