மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு புகார்: அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை
மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக புகார் கூறி செட்டிமாங்குறிச்சி அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
எடப்பாடி,
எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 650 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 6-ம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும்.
மீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ-மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுடன், சில மாணவ-மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும் போது, நான் இந்த பள்ளிக்கு தற்போது தான் தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ-மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (இன்று) உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.