கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-01 23:00 GMT
கீழ்வேளூர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா 4 வருவாய் சரகங்களையும், 55 கிராம நிர்வாக அலுவலகங்களையும் கொண்ட மாவட்டத்தில் பெரிய வருவாய் கிராமமாக கருதப்படுகிறது.

இந்த கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்திற்கு கடந்த 2008-ம் ஆண்டு நாகை மெயின்ரோட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு, மேலப்பிடாகை, கீழையூர், தேவூர், சாட்டியக்குடி, மணலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருமானச்சான்று, சாதிச்சான்று, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக சுமார் 2 பஸ்கள் மாறி இங்கு வந்து செல்கின்றனர். பல்வேறு பணிகள் நிமித்தமாக தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குறைந்தது சுமார் 7 மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்து பணிகளை முடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் நலன்கருதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கழிவறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவசரத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பேரூராட்சி சுகாதார வளாகத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

குறிப்பாக பெரும்பாலானோர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட வருவாய் நிர்வாகத்தினர் கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களின் இன்றியமையாத தேவையான குடிநீர் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்