வேலூர் அருகே வாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிள், பணம் பறித்த 2 பேர் கைது

வேலூர் அருகே வாலிபரை தாக்கி பணம், மோட்டார்சைக்கிளை பறித்துச் சென்றவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-01 22:36 GMT
வேலூர்,

வாலிபரை தாக்கி பணம், மோட்டார்சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூரை அடுத்த பொய்கையைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 19). இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலூரில் இருந்து பொய்கைக்கு ஒரு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சேண்பாக்கம் பகுதியில் வந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் திடீரென அவரின் மோட்டார்சைக்கிளை மறித்து பிரவீனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறித்தனர். பின்னர் அதே மோட்டார்சைக்கிளில் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் திருடன்.. திருடன்.. எனச் சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து சரமாரியாக தாக்கினர். அதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வேலூர் வடக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேரிடம் விசாரணை நடத்த சென்றனர். அந்த நேரம் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கருகம்புத்தூர் பெருமாள்நகரைச் சேர்ந்த மணி (20), முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சரண் (22) என்பதும், பிரவீனை தாக்கி பணம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து மணி, சரணை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம், மோட்டார்சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்