பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி இருந்தால் தூத்துக்குடி சம்பவம் நடந்திருக்காது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி இருந்தால் தூத்துக்குடி சம்பவம் நடந்திருக்காது என்று கோவையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை,
மத்திய அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி கையெழுத்து போட்டு உள்ளார். இதன் காரணமாக 120 ஆண்டுகளாக தீர்க்கப்படாத காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பா.ஜனதா செய்து உள்ளது.
அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. திருப்பூரில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு பிடிபட்டார். கோவையில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். இதை நாங்கள் முன்கூட்டியே சொன்னோம். ஆனால் தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பயங்கரவாதிகள் புகுந்ததால் அந்த போராட்டம் திசைமாறியது. அப்போதே தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய வில்லை. தூத்துக்குடியில் மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் போராட்டமே திசை மாறியது. அங்கு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் இதுபோன்று செய்ய வாய்ப்பு இல்லை. பயங்கரவாதிகள் புகுந்ததால்தான், அமைதியாக நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. நாங்கள் சொன்னபோதே பயங்கரவாதிகளை தமிழக அரசு கட்டுப்படுத்தி இருந்தால் தூத்துக்குடி சம்பவம் நடந்திருக்காது. அப்பாவி பொதுமக்கள் 13 பேர் இறந்து இருக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்த் துணிச்சலான கருத்தை சொல்லி இருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. எனவே இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு தமிழகத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். பொதுமக்களின் நியாயமான போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் போராட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்த போராட்டமாக இருந்தாலும் அதில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது.
நாங்கள் பொதுமக்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தவில்லை. போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்பது தவறு. போராட்டம் மட்டுமே சோறு போடும் என்று பிற கட்சிகள் சொல்வது கண்டிக்கத் தக்கது. தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்களை போலீசார் கைது செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் சரியான முறையில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். அப்பாவி பொது மக்களை கைது செய்யக்கூடாது.
நான் தூத்துக்குடியில் 3 நாட்கள் தங்கி இருந்து அங்குள்ள மக்களை சந்தித்து பேச உள்ளேன். சாதாரண அரசியல்வாதிகள் போல செல்லாமல், நான் டாக்டர் என்ற முறையில் மருத்துவக்குழுவையும் என்னுடன் அழைத்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்ய உள்ளேன். தூத்துக்குடி சம்பவம் குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை என்று பலர் கூறி வருகிறார்கள். அது தவறு. எங்கள் கட்சி தலைவர் அமித்ஷா இது குறித்து பேசி உள்ளார். எனவே பிரதமரின் கருத்து தான் அமித்ஷாவின் கருத்து ஆகும்.
தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் தி.மு.க. மாதிரி சட்டமன்றத்தை நடத்தி வருகிறது. அந்த மாதிரி சட்டமன்றத்தில் கூட முதல்– அமைச்சர் யார் என்று அவர்கள் அறிவிக்க வில்லை. மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்–அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில்தான் செயல்பட்டு வருகிறார். அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்