மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்சுக்கு தீ வைத்த சம்பவத்தில் இறந்த மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், நஷ்டஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-06-01 22:00 GMT
நெல்லை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகே அரசு பஸ்சுக்கு சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 63) பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இறந்த வள்ளியம்மாளின் உடலை நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி நடந்த பஸ் தீவைப்பு சம்பவத்தில் வள்ளியம்மாள் இறந்தார். எனவே அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். இதையடுத்து வள்ளியம்மாளின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்