பொதுமக்கள் புகார் எதிரொலி: மாவட்ட சமூக நல அலுவலருக்கு கட்டாய விடுப்பு கலெக்டர் அதிரடி நடவடிக்கை
சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை தேனி மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தேனி,
தேனி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் பெற்ற பயனாளிகள் சிலருக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதற்கான உத்தரவு கிடைக்கப்பெற்றும் தங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாதது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகள் மனுக்கள் கொடுத்து வந்ததோடு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உத்தமபாளையம் பகுதிக்கு கலெக்டர் சென்ற போது அவரிடம் பயனாளிகள் சிலர் நேரடியாக புகார்கள் செய்தனர். இதையடுத்து பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படாதது, தாமதமாக வழங்கப்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக மாவட்ட சமூக நல அலுவலர் உமையாளை கட்டாய விடுப்பில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மாவட்ட சமூக நல அலுவலர் விடுப்பில் உள்ளார். அந்த பணியிடத்துக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதிகாரி மீது புகார் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை கட்டாய விடுப்பு எடுக்க உத்தரவிட்டதோடு, விசாரணை முடியும் வரை அவரை சமூக நலத்துறை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது சமூக நலத்துறை பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜேஸ்வரி, சமூக நல அலுவலர் உமையாளின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.