க.பரமத்தி அருகே லாரி, பஸ் மோதி கொண்டதில் சிறுமிகள் உள்பட 12 பேர் காயம்

க.பரமத்தி அருகே லாரி, பஸ் மோதி கொண்டதில் சிறுமிகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-06-01 22:45 GMT
க.பரமத்தி

கோவையில் இருந்து நேற்று காலை திருச்சியை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை பெரம்பலூர் மாவட்டம் துறையூர் அருகே உள்ள மருவத்தூரை சேர்ந்த ரங்கசாமி(வயது 42) ஓட்டி சென்றார். அதில் துறையூர் அருகே உள்ள தா.பேட்டையை சேர்ந்த கவுதம்(30) கண்டக்டராக இருந்தார். அந்த பஸ்சில் மொத்தம் 25 பேர் பயணம் செய்தனர். பஸ் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள நெடுங்கூர்பிரிவு அருகே கரூர்- கோவை சாலையில் சென்றுகொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன.

இதில் பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தென்னிலையை சேர்ந்த சுப்பிரமணி மகள்கள் அபினயா(16), அக்‌ஷயா(11) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோமதி(39), சாமியாத்தாள்(71), வெள்ளக்கோவிலை சேர்ந்த மெய்யழகன்(65), பஸ் டிரைவர் உள்பட மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.

லாரி டிரைவருக்கு காயம் ஏற்படவில்லை. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் மட்டும் படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்