72 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ஏற்பாடு

72 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-06-01 21:30 GMT

விருதுநகர்,

கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:–

மண்வள அட்டை திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிஉதவியோடு 2015–ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு இரு வருட சுழற்சி முறையில் வயல்களில் கிரிட் முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் சுழற்சியில் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 12 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுழற்சியில் இதுவரை 66 ஆயிரத்து 319 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018–19–ம் ஆண்டு நிறைவில் மொத்தம் 72ஆயிரத்து 61 விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்குத் தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது. ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்திருப்பது போல, மண்வள அட்டையினையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் மிகவும் அவசியமானதாகும்.

மண்வள அட்டை உபயோகத்தினை மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், நடப்பு ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் நாச்சியார்பட்டி, சிவகாசி வட்டாரத்தில் கவுண்டன்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் கஞ்சன்நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்