வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து 93 பவுன் நகை-பணம் கொள்ளை

ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து 93 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-01 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பட்டுவரதன் (வயது 60). மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தனது மகள் விஜயா (32) உடன் வசித்து வருகின்றார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் விஜயாவுடன் கடைக்கு சென்றுவிட்டார். இரவு வீட்டுக்கு திரும்பி வந்த அவர்கள், சமையல் அறைக்கு சென்றனர். அங்கு பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் தரையில் சிதறி கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைத்து இருந்த 93 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சம்பவ இடத்தில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்துகொண்டனர்.

பட்டுவரதன் தனது மகளுடன் வெளியே சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கத்தில் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்