ரூ.1 கோடி கேட்டு மதுரையை சேர்ந்த தனியார் நிறுவன அதிபர் கடத்தல் உடல் காயங்களுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தவரால் பரபரப்பு
ஈரோட்டில் ரூ.1 கோடி கேட்டு மதுரையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்டார். அவர் உடல் காயங்களுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை அழகப்பா நகரை சேர்ந்த ராஜாசண்முகம் (வயது 44) என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடல் முழுவதும் அடிபட்ட காயங்களுடன் இருந்த அவருடன் அதே பகுதியை சேர்ந்த சைமன் (62) என்பவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
உடல் முழுவதும் காயம் பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி புறநிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஈரோட்டில் வைத்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ரூ.1 கோடி கேட்டு தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அதுபற்றிய விவரம் வருமாறு:–
ராஜா சண்முகம், மதுரையில் ‘நேஷனல் அக்ரிகல்சர் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, வங்கிகளில் இருந்து கடன்கள் பெற்றுக்கொடுப்பது போன்ற பணிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30–ந் தேதி ஈரோட்டில் இருந்து ஒருவர் ராஜா சண்முகத்தை தொடர்பு கொண்டார். அவர், உடனடியாக ரூ.5 கோடி கடனாக வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதை நம்பிய ராஜா சண்முகம் மதுரையில் இருந்து ஒரு காரில் ஈரோடு வந்தார். அவருடன், அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் சைமன் என்பவரும் வந்தார். காரை வேறு ஒருவர் ஓட்டி வந்தார்.
இவர்கள் 3 பேரும் ஈரோடு வந்ததும், தொலைபேசியில் பேசியவரை தொடர்பு கொண்டனர். அவர்கள் திண்டல் பகுதியில் இருப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் கூறிய இடத்துக்கு சென்றதும், ஒருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் கடன் பெறுவது தொடர்பாக விரிவாக பேச வேண்டும், அருகில் உள்ள தோட்டத்துக்கு செல்வோம் என்று கூறினார்.
அதன்படி திண்டலில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றனர். அங்கு ராஜா சண்முகம் உள்பட 3 பேரும் சென்றபோது சுமார் 10 பேர் இருந்தனர். அவர்கள் கடன் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தபோதே, அங்கிருந்த 10 பேரும் ராஜா சண்முகம் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். மேலும் அவர் வந்த கார் சாவியையும் பறித்துக்கொண்டு ரூ.1 கோடி கொடுத்தால்தான் விட முடியும் என்று கூறினார்கள். உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்ற ராஜாசண்முகம், சைமன் மற்றும் கார் டிரைவரை சுற்றி வளைத்து 10 பேரும் பிடித்தனர். 3 பேரின் கண்களையும் கட்டி வைத்து தடி மற்றும் கட்டைகளால் அடித்து உதைத்தனர். 30–ந் தேதி பிற்பகல் முதல் நேற்று முன்தினம் இரவு வரை அவர்களை அங்கேயே கட்டி வைத்திருந்தனர். முதலில் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று கேட்ட கும்பல் பின்னர் ரூ.50 லட்சம் கொடு என்று கேட்டது. அதுவும் கொடுக்க முடியாது என்று மறுத்ததால் ரூ.25 லட்சம் கொடு என்று கேட்டு அடித்தனர். இறுதியில் ராஜா சண்முகம் மதுரையில் உள்ள அவரது நிறுவன மேலாளர் ராமநாதன் என்பவருக்கு தொடர்பு கொண்டார். அவரை 10 பேர் கொண்ட கும்பல் ரூ.1 கோடி கேட்டு கடத்தி வைத்து அடித்து கொடுமைப்படுத்துவதை கூறினார். அதைத்தொடர்ந்து மேலாளர் ராமநாதன் என்பவர் மதுரையில் இருந்து புறப்பட்டு வந்தார். அவர் ரூ.1½ லட்சம் பணத்தை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் கொடுத்து ராஜா சண்முகம் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டார்.
பின்னர் திண்டலில் இருந்து புறப்பட்ட ராஜா சண்முகம் மற்றும் சைமன் ஆகியோர் நள்ளிரவு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். ராமநாதன் மற்றும் டிரைவர் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
மேற்கண்ட தகவலை போலீஸ் விசாரணையில் ராஜா சண்முகம் தெரிவித்தார். அவர் போலீசாரிடம் கூறும்போது, அவரை கடத்தி வைத்து அடித்தவர்களில் ஒருவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சப்–இன்ஸ்பெக்டராக இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்த தகவல் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ராஜா சண்முகத்திடம் விசாரித்தார். மேலும் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி ஈரோடு போலீசாரிடம் விசாரித்தபோது, திருப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் ராஜா சண்முகம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என்றனர். மேலும் அவர்கள் கூறும்போது, ராஜா சண்முகம் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 2 நாட்கள் அவரை கண்களை கட்டி வைத்து அடித்ததாக கூறுகிறார். ஆனால் யாரையும் சரியாக அடையாளம் தெரியவில்லை என்கிறார். மேலும் அவர் சம்பாதித்ததில் பங்கு கேட்டு கடத்தல்காரர்கள் அடித்ததாக கூறுகிறார். எனவே தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையாக இருந்தாலும், தாக்கியவர்கள் அவருக்கு மிகவும் தெரிந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர் உடல் நலம் தேறிய பின்னர் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலை தெரியும் என்றார்கள்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.