ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்: தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிக்கு 1 ஆண்டு ஜெயில்

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-06-01 22:00 GMT

ஈரோடு,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர், கேரளா மாநிலத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த 9.12.2017 அன்று, யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் ஈரோடு அருகே நள்ளிரவில் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு அருகில் பயணம் செய்த ஒருவர் அவரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே ஈரோடு ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும் கல்லூரி மாணவி ரெயிலில் இருந்து இறங்கி, ஈரோடு ரெயில்வே போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.

அதன்பேரில் மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டவரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பெங்களூரு கோகுல் பந்தப்பா கார்டன் பகுதியை சேர்ந்த சுஜாதன் (58) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சுஜாதனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்–2–ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரங்கராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சுஜாதனுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து சுஜாதன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்