தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பற்றி ரஜினிகாந்த் விமர்சனம் செய்வது சரியல்ல- திருநாவுக்கரசர் பேட்டி
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பற்றி ரஜினிகாந்த் விமர்சனம் செய்வது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.
வி.கைகாட்டி
மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நேற்று அரியலூர் மாவட்டம் காடுவெட்டிக்கு வந்தார். அங்கு குருவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்ட திருநாவுக்கரசர், அரியலூர் அருகே வி.கைகாட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திரை உலகில் செல்வாக்கு மிக்க நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்ததை வரவேற்கிறேன். முன்னதாக அவர் தூத்துக்குடி செல்லும் முன்பு காவல்துறையை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களை பார்த்த பின்னர் போராட்ட களத்தில் விஷமிகள், தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது அவருக்கு கொடுத்த தகவல்கள் தவறானது என்பதை காட்டுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது விமர்சனம் செய்வது சரியல்ல.
தூத்துக்குடி போராட்டத்தில் விஷமிகள், வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்றால் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும், உளவுபிரிவிற்கான தோல்வியே தவிர மக்களுக்கானது அல்ல. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களே என்பதால், திட்டமிடப்பட்ட துப்பாக்கி சூடு என்ற சந்தேகம் எழுகிறது.தி.மு.க., அ.தி.மு.க. ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது வியப்பாக உள்ளது. இது பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் குழுவாக இருப்பதை திசைதிருப்பும் முயற்சி ஆகும். மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கூறுவது கண்டனத்துக்குரியது. தீவிரவாதத்தை ஒடுக்குவது மத்திய-மாநில அரசுகளின் பொறுப்பு என்பதை மறந்து, பொதுமக்களை குறைகூறுவது முறையற்றது.
மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் தான் எடுத்து வைக்க வேண்டும் என்பதல்ல. மக்கள் மன்றத்திலும் எடுத்து வைக்கலாம். அந்த வழியில்தான் தி.மு.க. மாதிரி சட்டமன்றம் செயல்படுகிறது. மத்திய அரசு மீது ராகுல்காந்தி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியபோதிலும் பிரதமர் மோடி பதில் கூறாதது, மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.