கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓட்டம் நடிகர் துனியா விஜய் மீது வழக்கு

‘மாஸ்திகுடி‘ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி இறந்த வழக்கு தொடர்பாக கைது செய்ய முயன்றபோது தயாரிப்பாளர் தப்பி ஓடினார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக நடிகர் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-05-31 22:30 GMT
பெங்களூரு,

கன்னட நடிகர் துனியா விஜய் நடித்து வெளியான படம் ‘மாஸ்திகுடி‘. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியில் நடித்த சண்டை பயிற்சியாளர் அனில் மற்றும் உதய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுதொடர்பாக தாவரகெரே போலீசார் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் கவுடா, இயக்குனர் உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், ஜாமீனில் வெளிவந்த பட தயாரிப்பாளர் சுந்தர் கவுடா தலைமறைவானார். இதன் காரணமாக ராமநகர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டு சுந்தர் கவுடாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதனால் சுந்தர் கவுடாவை கைது செய்யும் முயற்சியில் தாவரகெரே போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்த நிலையில், தாவரகெரே போலீசார் பிடிவாரண்டை எடுத்து கொண்டு பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் உள்ள சுந்தர் கவுடாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது, வீட்டில் சுந்தர் கவுடா, நடிகர் துனியா விஜய் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.

இதையடுத்து, சுந்தர் கவுடாவை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது, போலீசாரை கைது செய்ய விடாமல் நடிகர் துனியா விஜய் தடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, ‘சுந்தர் கவுடாவின் தாய்க்கு உடல் நலம் சரியில்லை. இதனால், சுந்தர் கவுடாவை கைது செய்ய வேண்டாம். நானே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருகிறேன்‘ என்று கூறியுள்ளார். இந்த வேளையில், வீட்டில் இருந்த சுந்தர் கவுடா தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நடிகர் துனியா விஜயின் செயலை கண்டித்தனர். மேலும், போலீஸ் ஏட்டு கோவிந்தராஜூ, நடிகர் துனியா விஜய்க்கு எதிராக சி.கே.அச்சுக்கட்டு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களின் பணிக்கு இடையூறு செய்ததாக நடிகர் துனியா விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்