கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய பெண் கைது

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-05-31 23:15 GMT
செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருடைய மகன் அறிவழகன் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ரேகா (34). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அறிவழகன் திடீரென இறந்தார்.

இதனால் மனைவி ரேகா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது ரேகா, தனது கணவர் அறிவழகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனை தாங்க முடியாமல் அவர் இறந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூறினார். ஆனால், இறந்துபோன அறிவழகனின் உடம்பில் காயம் இருந்ததால் உறவினர் இளஞ்சியம் என்பவர் அறிவழகனின் சாவில் மர்மம் இருப்பதாக செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை, போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அறிவழகனின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக இறந்துபோன அறிவழகனின் மனைவி ரேகாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரேகாவுக்கும், செம்பனார் கோவில் அருகே மேலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்த கலியன் மகன் ராஜசேகர் (31) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த அறிவழகன், மனைவி ரேகாவை கண்டித்துள்ளார். அதனை பொருட்படுத்தாத ரேகா, ராஜசேகருடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரேகா, கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று முடிவு செய்தார். இது குறித்து தனது கள்ளக்காதலன் ராஜசேகரிடம் தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று அறிவழகன் தூங்கிக்கொண்டிருந்தபோது ரேகாவும், ராஜசேகரும் சேர்ந்து அவருடைய முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, துடிக்க, துடிக்க கொலை செய்துள்ளனர்.

பின்னர் ரேகா, மறுநாள் காலை தனது கணவர் அறிவழகன் இரவு தூங்கும்போது நெஞ்சுவலியால் இறந்துவிட்டார் என்று கூறி நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரேகாவையும், அவருடைய கள்ளக்காதலன் ராஜசேகரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்