வெடிமருந்துகளுடன் இறங்கிய போது திடீரென வெடித்ததில் 3 தொழிலாளர்கள் பலி

வேட்டவலம் அருகே கிணற்றில் வெடி வைப்பதற்காக வெடிமருந்துகளுடன் இறங்கிய போது திடீரென வெடித்து சிதறியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நில உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-05-31 23:00 GMT
வேட்டவலம்,


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 51) என்பவருக்கு சுமார் 7 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தில் உள்ள கிணற்றை 70 அடிக்கு மேல் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

நேற்றும் வழக்கம் போல் கிணற்றை ஆழப்படுத்துவதற்கு கெங்கனந்தல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் நீலான் மகன் சீத்தாராமன் (26), பாண்டியன் மகன் தங்கராஜ் (27), மாணிக்கம் மகன் குமார் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மண் அள்ளும் கிரேன் மூலம் 60 ஜெலட்டின் குச்சி மற்றும் வெடிமருந்துகளுடன் கிணற்றில் இறங்கி உள்ளனர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துச்சிதறின. இதில் 3 பேரும் கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெடி சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, வேட்டவலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தலைமை நிலைய அலுவலர் மணிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் புகை மூட்டத்தை போக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி உள்ளே இறந்து கிடந்த சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகிய 3 பேரின் உடலையும் மீட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் பாலசுப்பிரமணியை வேட்டவலம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் இறந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சீத்தாராமனுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் தாமோதரன் என்ற மகனும், தீபலட்சுமி, மித்ரா என 2 மகள்களும் உள்ளனர்.

தங்கராஜுக்கு காமாட்சி என்ற மனைவியும், புகழேந்தி என்ற மகனும், யுவராணி என்ற மகளும் உள்ளனர். குமாருக்கு நீலாவதி என்ற மனைவியும், ஆனந்தி, சரண்யா என 2 மகளும், அருணாச்சலம் என்ற மகனும் உள்ளனர். இறந்த 3 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. 

மேலும் செய்திகள்