சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

சிங்கிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினார்கள். இதில் மாடுகள் முட்டியதில் ஊர்க்காவல் படை வீரர், சிறுவன் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-05-31 22:45 GMT
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாடுகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

ஜல்லிக்கட்டில் தம்மம்பட்டி, உலிபுரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 561 காளைகள் பங்கேற்றன. இதே போல 246 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன. துள்ளிக்குதித்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினார்கள். சில காளைகளின் திமிலை பிடித்து, அதனை வீரர்கள் அடக்கினார்கள். சில காளைகளை மாடுபிடி வீரர்களால் அடக்க முடியவில்லை. உடனுக்குடன் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், அடங்கா காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே வாடிவாசலில் இருந்து பாய்ந்து சென்ற ஒரு காளை, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பார்வையாளர்களின் பகுதிக்குள் புகுந்தது. இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிங்கிபுரத்தை சேர்ந்த சிறுவன் அரிபிரசாத் (14) மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூரை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் சிவக்குமார் ஆகியோர் உள்பட பார்வையாளர்கள் 14 பேர் காயம் அடைந்தனர்.

இதே போல மாடுகள் முட்டியதில் 14 வீரர்கள் காயம் அடைந்தனர். மொத்தத்தில் இந்த ஜல்லிக்கட்டில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அந்த பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து காயம் அடைந்தவர்களில் 4 பேர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு சிங்கிபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடக்க நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) செல்வம், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்