கட்டிட மேஸ்திரியிடம் வழிப்பறி செய்த லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருச்செங்கோடு அருகே கட்டிட மேஸ்திரியிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-31 23:00 GMT
எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம் அருகே கொன்னையாறு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலையில் திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பிரிவு ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நடந்து சென்ற பன்னீர் செல்வத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 மற்றும் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பன்னீர்செல்வம் திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் பால்மடை என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள், எடப்பாடி எட்டிக்குட்டைமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன்(32), எடப்பாடி அருகே கன்னந்தேரி பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி துரை(29) ஆகியோர் என்பதும், அவர்கள் பன்னீர்செல்வத்திடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன், ரூ.1,000-ம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை செய்தனர். இவர்கள் திருச்செங்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் வழிப்பறி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்