அரசு நலத்திட்ட உதவி பெற விவசாயிகள் தேர்வு கலெக்டர் தகவல்
வேளாண் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு நடப்பதால் விவசாயிகள் வட்டார அலுவலர்களை அணுகலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.;
விருதுநகர்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விளக்கமும் இதற்கு முன்னர் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்களும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நுண்ணீர் பாசனத்திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுவதால் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி முன்னுரிமை பதிவேடுகளில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பழ மரங்கள் மற்றும் காய்கறி பயிர்களின் விதைகள் மற்றும் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி மற்றும் காரியாபட்டி வட்டாரங்களில் பண்ணைக்குட்டை அமைத்திட பயனாளிகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதால் விவசாயிகள் விண்ணப்பங்கள் அளித்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருவதால், விவசாயிகள் அந்தந்த துறை வட்டார அலுவலர்களை அணுகி பயன்பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) பூபதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.