கடலில் இறால் பிடித்தபோது பரிதாபம்: வி‌ஷ மீன் கடித்து மீனவர் சாவு

தூத்துக்குடியில் கடலில் இறால் மீன் பிடித்த மீனவர், வி‌ஷ மீன் கடித்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-05-31 20:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடலில் இறால் மீன் பிடித்த மீனவர், வி‌ஷ மீன் கடித்து பரிதாபமாக இறந்தார்.

இறால் பிடித்த மீனவர் 

தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதே போல் நாட்டு படகு மீனவர்களும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த கனிஸ்டன் மகன் பிரின்ஸ்கோ (வயது 22) மற்றும் சிலர் நேற்று காலை 6 மணிக்கு இறால் பிடிக்க சென்றனர். அவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு, பாறைகளுக்கு நடுவே இருக்கும் இறால்களை பிடித்து கொண்டு இருந்தனர்.

வி‌ஷ மீன் கடித்தது 

காலை 7.30 மணிக்கு திடீரென பிரின்ஸ்கோ உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை உடன் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் உடம்பில் பல இடங்களில் தடுப்பு தடுப்பாக இருந்தது. அதே போல் உடன் இருந்த சிலருக்கும் உடம்பில் தடுப்புகள் ஏற்பட்டன. இந்த தடுப்புகள் சொதி மீன் எனப்படும் வி‌ஷ மீன் கடித்ததால் ஏற்பட்டதை அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் மயங்கிய பிரின்ஸ்கோ அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பரிதாப சாவு 

பின்னர் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினரும், நண்பர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்