நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது உதவியாளரும் சிக்கினார்

நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர், அவருடைய உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-31 21:00 GMT

நெல்லை,

நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர், அவருடைய உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

பணி நிரந்தரம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன்பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்காக அந்த பள்ளிக்கூட நிர்வாகம் ஆசிரியையின் பணி நிரந்தரம் தொடர்பான நகல்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் கல்வித்துறையில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் இருக்காது. அதற்கு பதிலாக நெல்லை மாவட்டத்தில் இருந்த 3 கல்வி மாவட்டங்கள் 5 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய நடைமுறை நாளை (அதாவது இன்று) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம்

எனவே, பணி நிரந்தரம் செய்வதற்கான பணியை நேற்றே முடிக்க ஆசிரியை முயற்சி மேற்கொண்டார். இதற்காக களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள், கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றம் செய்ய இருப்பதால் உடனடியாக ரூ.6 லட்சம் தந்தால் உடனே பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ரேச்சல் ஜானட், அவரது அண்ணன் வள்ளியூரைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் ஆகியோர் இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோரிடம் அவ்வளவு தொகை தரமுடியாது என்று தெரிவித்தனர். கடைசியாக ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் தருவதாக ஜான் வின்சென்ட் தெரிவித்தார்.

கையும், களவுமாக பிடிபட்டனர்

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் நெல்லையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார்.

அங்கு இருந்த களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையிலான போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்தனர்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் நுழைந்ததை கண்ட அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் ஜன்னல் வழியாக மற்றவர்களிடம் வாங்கிய பணத்தை வெளியே தூக்கி எறிந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களையும் தடுத்து நிறுத்தி அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதில் ஊழியர்களின் மேஜைகளில் இருந்த ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்