கலவரத்தில் பலியான 13 பேரின் உடல்களும் பாதுகாப்பாக உள்ளன ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியான 13 பேரின் உடல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியான 13 பேரின் உடல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்கள் பாதுகாப்பாக உள்ளனதூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் 12 பேரின் உடல்களை மட்டுமே பாதுகாப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனால் 13 பேர் இறந்து உள்ளதால், உடல்களை வைப்பதில் சிரமம் இருப்பதாகவும், ஒரு உடல் அழுகியதாகவும் பரவலாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் கேட்டபோது, அரசு ஆஸ்பத்திரியில் 12 உடல்கள் வைப்பதற்கு குளிரூட்டும் பெட்டிகள் (பிரீசர்) உள்ளன. ஒரு உடல் வைப்பதற்காக தனியாரிடம் இருந்து குளிரூட்டும் பெட்டி வாங்கப்பட்டு, அதில் ஒரு உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்கல்லூரியில் 24 உடல்களை வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இதனால் ஆஸ்பத்திரியில் வேறு யாரேனும் இறந்தால், அவர்களின் உடல்கள் மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பாக நல்ல நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. அனைத்து உடல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விழிப்புணர்வுஇதற்கிடையே, கலவரத்தில் பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 6 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு உடலையும் கொண்டு செல்வதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் தூத்துக்குடியில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக போலீசார் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டி, அதன் மூலம் தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் தெருக்களில் நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.