‘வீல் சேர்’ வெற்றிப் பெண்!

ஒரு மாற்றுத்திறனாளியாய் தான் எதிர்கொள்ளும் சிரமங்கள் சக மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடாது என்று உழைத்துவருகிறார், விராலி மோடி.

Update: 2018-06-01 22:30 GMT
மும்பையைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணான விராலியின் வாழ்க்கையை மலேரியா புரட்டிப் போட்டது.

இவரது 15 வயதில் தாக்கிய மலேரியா காய்ச்சலால், இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது.

‘‘23 நாட்கள் கோமாவில் கிடந்த நான், மீண்டும் கண் விழித்தபோது என் உலகமே உடைந்து நொறுங்கிவிட்டது போலத் தோன்றியது. வாழ்க்கையில் இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை. குறுகிய காலத்தில் என் வாழ்க்கை தலைகீழாகும் என்று எனக்குத் தெரியவில்லை. விரக்தியின் உச்சத்துக்குப் போன நான், தற்கொலை செய்துகொள்ளவும் முயன்று தோற்றேன். அப்போதுதான், நாம் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால், அதில் ஓர் அர்த்தமிருக்கிறது என்று உணர்ந்தேன்’’ என்கிறார்.

பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள விராலிக்கு, வீல் சேரே வாழ்க்கை ஆகிவிட்டது. ஆனால் அவர் குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை.

உடல் பாதிப்பை மீறி வாழ்க்கையில் வென்றிருக்கிற விராலி, மற்ற மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அக்கறை கொள்கிறார். அவர்களின் நலனுக்காக என்ன முயற்சி மேற்கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக, இரண்டு திட்டங்களை முன்னெடுத்து மேற்கொள்கிறார்.

அதாவது, உணவகங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சரிவுப்பாதைகள் அமைக்கச் செய்வது, ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தச் செய்வது. இந்த இரு விஷயங்களுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் விராலி.

தனது சொந்த அனுபவங்கள்தான் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வைத்திருக்கின்றன என்கிறார் இவர். சரிவுப்பாதை இல்லாத உணவகங்களில் இவரை சக்கர நாற்காலியுடன் தூக்கிச் செல்ல அங்குள்ள ஊழியர்கள் மறுத்துவிடுகிறார்களாம். அதேபோல பிற இடங்களிலும் அனுமதிக்கத் தயங்குகிறார்களாம்.

‘‘ஊழியர்கள் வீல் சேருடன் தூக்கிச் செல்லத் தயாராக இருந்தாலும், யாராவது ஒருவர் கைதவறி விட்டுவிட்டால் என்னாவது? எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளி களையும் மனதில் வைத்து உரிய வசதிகளைச் செய்வதுதானே சரியாக இருக்கும்?’’ என்று விராலி கேள்வி எழுப்பு கிறார். ரெயில்களில் சக்கர நாற்காலியை ஏற்றி இறக்கவும், நிறுத்தவும் போதுமான வசதிகள் வேண்டும் என் கிறார்.

‘‘மற்ற எல்லோரையும் போல நாங்களும் எல்லா விஷயங்களையும் அனுபவிக்க நினைப்பதும், பயணம் செய்ய நினைப்பதும் எப்படித் தவறாகும்? சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து பொது இடங்களிலும், போக்குவரத்து அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி களை செய்துகொடுக்க வேண்டும்’’ -திடமான குரலில் கூறுகிறார், விராலி மோடி. 

மேலும் செய்திகள்