ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரெயிலை சேலத்தில் இருந்து இயக்க வேண்டும் உறுப்பினர்கள் கோரிக்கை

ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரெயிலை சேலத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கோட்ட மேலாளரிடம் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-05-30 22:45 GMT
சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ரெயில் பயனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்ட மேலாளர் சுப்பாராவ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரெயில் பயனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை மேலாளரிடம் தெரிவித்தனர்.

அதில், காட்பாடியில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும். ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலை சேலத்தில் இருந்து இயக்க வேண்டும். கரூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மின்தூக்கி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

புதிய ரெயில்கள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மின்தூக்கி மற்றும் தானியங்கி படிக்கட்டு பணியை விரைவில் முடித்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதலாக புதிய ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோட்ட மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்த கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்று கோட்ட மேலாளர் அவர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் சந்திரபால், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் விஜூவின் மற்றும் ரெயில் பயனாளிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்