தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மக்கள்பாதை இயக்கம் சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2018-05-23 23:00 GMT
நாமக்கல்,

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கொழந்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தம்பிராஜா முன்னிலை வகித்தார். இதில் மாநில குழு உறுப்பினர் மணிவேல் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

இதேபோல் மக்கள் பாதை இயக்கம் சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியான நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கை இல்ல பொறுப்பாளர் கதிர்செல்வன் தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் பாதை இயக்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், கல்வியாளர் தயாளன் மற்றும் நம்பிக்கை இல்ல குழந்தைகள் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவபடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. 

மேலும் செய்திகள்