தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சத்தியமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-23 22:15 GMT
ஈரோடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று முன்தினம் 100-வது நாள் போராட்டத்தையொட்டி போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தமிழகம் முழுவதும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நேற்று நடைபெற்றது.

அதன்படி சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ் முன்னிலை வகித்து பேசினார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்தியமங்கலம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 20 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

கவுந்தப்பாடி நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பவானி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வீரக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி அய்யாவு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் லுக்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம்ராஜா, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்