எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1140 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்து 397.
விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுத்துறை இணையதளங்களில் ( www.tnr-esults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை வெளியிடும் முறையில் கடந்த வருடம் முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதேபோல இந்த வருடமும் மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், 2-வது இடம், 3-வது இடம் பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை.
மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்று இந்த முறை அறிவிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்தார்.
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி .1 சதவீதம் கூடி உள்ளது.
இந்த வருடம் மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதம் பேர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 3.9 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.
இந்த தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 401 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 796 பேர். இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 950. மாணவிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 846.
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 584. இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,687.
கடந்த ஆண்டு போலவும், கடந்த 16-ந் தேதி வெளியிட்ட பிளஸ்-2 தேர்வு முடிவு போலவும் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட்டது. அதன் காரணமாக தேர்வு முடிவை தெரிந்துகொள்ள பள்ளிகளில் மாணவர்களின் கூட்டம் குறைந்தது.