தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து, கண்களில் கருப்பு துணியை கட்டி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மக்கள்மேடை, இடதுசாரி தொழிலாளர்கள், இளைஞர், மாணவர், மாதர் சங்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயமணி, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சந்தானம் உள்பட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும், முகமூடி அணிந்தும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தமிழக அரசை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். முன்னதாக அவர்கள் நாகல்நகர், காந்திமார்க்கெட், பஸ்நிலையம், காட்டாஸ்பத்திரி, பேகம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
இதேபோல் திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு தமிழக உரிமை மீட்பு கூட்டமைப்பினர் சார்பில் துப்பாக்கிசூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பாண்டியன், துரை சம்பத், யாழ்புலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிசூட்டை கண்டித்து கோஷமிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் பங்கேற்ற பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.
சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். போடி அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர். எனினும், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணி
இதே போல் கன்னிவாடி பஸ்நிலையம் அருகில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பழனியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் பதவி விலகக்கோரியும் கோஷமிட்டனர்.