விறுவிறுப்பை எட்டிய பால்கர் தேர்தல் களம்: மறைந்த சிந்தாமன் வாங்காவுக்கு பா.ஜனதா துரோகம் செய்துவிட்டது சிவசேனா பதிலடி

மறைந்த எம்.பி. சிந்தாமன் வாங்காவுக்கு பா.ஜனதா துரோகம் செய்துவிட்டதாக சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2018-05-22 22:30 GMT

மும்பை, 

மறைந்த எம்.பி. சிந்தாமன் வாங்காவுக்கு பா.ஜனதா துரோகம் செய்துவிட்டதாக சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.

பால்கர் இடைத்தேர்தல்

பால்கர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்த சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் டெல்லியில் உயிரிழந்தார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா எதிர் எதிராக போட்டியிடுகின்றன. சிந்தாமன் வாங்காவின் மகன் சீனிவாஸ் வாங்கா பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்து அக்கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதேபோல காங்கிரசில் இருந்து விலகிய ராஜேந்திர காவித்தை பா.ஜனதா பால்கரில் வேட்பாளராக அறிவித்து உள்ளது.

இதையடுத்து இரு கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் பால்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா கட்சி பால்கர் தேர்தல் விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டதாக கூறினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா துரோகம்

உடல்நலக்குறைவால் டெல்லியில் சிந்தாமன் வாங்கா உயிரிழந்தபோது பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் கூட அவரை பார்க்க வரவில்லை. பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து சிந்தாமன் வாங்காவின் வீட்டிற்கு வெறும் 5 நிமிடங்களே ஆகும்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவின் இருப்பிடமும் சில நிமிடங்கள் தொலைவிலேயே இருந்தது. ஆனால் ஒருவர் கூட பா.ஜனதாவில் இருந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. சிந்தாமன் வாங்காவின் குடும்பம் குறித்தும் பா.ஜனதாவினர் அக்கறை செலுத்தவில்லை. கட்சி தாவி வந்த ராஜேந்திர காவித்தை சிந்தாமன் வாங்காவின் பதவிக்கு முன்னிறுத்தி இருப்பதன் மூலம் பா.ஜனதா தான் அவருக்கு துரோகம் செய்துவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்