பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பெரிய பாதிப்பு நாராயணசாமி பேட்டி

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சாதாரண, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-05-22 23:00 GMT
புதுச்சேரி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தி வருகிறது. இதில் முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாத காலம் அடிப்படை பயிற்சி (பவுன்டேசன் கோர்ஸ்) அளிக்கப்படுவதற்கு முன்பே ஒவ்வொருவருக்கும் என்ன பணி, எந்த மாநிலத்தில் பணி என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்த பணி ஒதுக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி இனிமேல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதன் பிறகு அடிப்படை பயிற்சி முடிக்க வேண்டும். இந்த பயிற்சியின்போது அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப் படும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களை பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது. மத்திய அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அடிப்படை பயிற்சி காலத்தில் அவர்களின் திறமையை பார்த்து மதிப்பெண் வழங்க வேண்டியது தேவையில்லை.

இது குறித்து பிரதமர் மோடி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணித்துறை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியாருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தற்போது உள்ள முறையே நியாயமாக இருப்பதால் அதனை மாற்றம் செய்ய தேவையில்லை. மத்திய அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையை தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொண்டு நிர்வாகத்தை சீரழித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கர்நாடக தேர்தல் நேரத்தில் மட்டும் விலை உயர்த்தப்படவில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது ரூ.2 உயர்த்தினால் பா.ஜ.க. பல கட்ட போராட்டம் நடத்தினார்கள். ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் கையில் விலை நிர்ணயத்தை கொடுத்ததால் விலை உயர்வு அதிகரிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டும் நிலையில் உள்ளது. இது சாதாரண மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சி இருக்கும். விளைபொருட்களின் விலை உயர்வால் சாதாரண, நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசலில் இருந்து மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இது மக்களின் பணம், மக்களுக்கு சென்றடைய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யாமல் 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்