திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது: மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாசில்தார் அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. அவினாசி தாலுகாவில் சேவூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசவலையபாளையம் உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 14 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்குகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக 14 கிராமங்களுக்கான நில அளவை சங்கிலி மற்றும் கோண அட்டை அளவைகளையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவினாசி தாசில்தார் விவேகானந்தன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் பல்லடம் தாலுகாவில் பல்லடம், வடுகபாளையம், நாரனாபுரம், பனிக்கம்பட்டி, கரைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்புகள் அகற்றக்கேட்பது என்பது உள்பட 247 மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி, பல்லடம் தாசில்தார் அருணா, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தா தேவி 83 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் லியாகத் தலைமையில், மங்கலம், திருப்பூர் டவுன், வீரபாண்டி, இடுவாய், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 77 மனுக்கள் பெறப்பட் டது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தி தொடங்கியதையொட்டி மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.