அரசு மருத்துவமனையில் தாமிர கம்பிகள் திருட்டு

புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் திருடப்பட்டன. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-22 22:45 GMT
புதுச்சேரி

புதுச்சேரி கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள 4-வது மாடியில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள ஒரு அறையில் எலக்ட்ரிக்கல் பணிக்கு தேவையான தாமிர கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தன.

சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டுச்சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அந்த கம்பிகளை திருடிச்சென்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இரவில் ஊழியர்கள் இங்கு இல்லாததை நோட்டமிட்டு தெரிந்துகொண்டு இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் சந்திரசேகரன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்