புதுவை மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

புதுவை மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-05-22 22:30 GMT
புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் புதுவையில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஜிப்மர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நிபா வைரஸ் காய்ச்சல் மலேசியாவில் இருந்து பரவி உள்ளது. வவ்வால் எச்சம் மற்றும் சிறுநீர் மூலமாக மனிதனுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 24 மணி நேரத்தில் உயிரிழந்து விடுவதாக கூறப்படுகிறது.

மாகி அருகில் உள்ள கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் தாக்கத்தினால் 16 பேர் இறந்துள்ளனர். இதற்கு மருந்து கிடையாது. கோழிக்கோடு அருகே உள்ள காரணத்தினால் மாகி பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும், சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை இயக்குனர் மாகி சென்றுள்ளார். அவர் அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாகியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி நிபா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகியில் இருந்து புதுவைக்கு தினந்தோறும் நிறையபேர் வந்து செல்கின்றனர்.

புதுச்சேரி ரெயில் நிலையம், பஸ்நிலையத்தில் அவர்களை கண்காணித்து நோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க புதுவை அரசு சார்பில் பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதுவை பகுதியில்கூட வீடுகளில் அறைகளை பூட்டி வைத்திருப்பவர்கள் வவ்வால்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். வெளியில் பன்றிகள் நடமாட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளோம். மாகியில் இதுவரை இந்த நோயால் எந்த பாதிப்பும் இல்லை. தேவைப்பட்டால் புதுவையில் இருந்து தனி மருத்துவ குழு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்