ஜோலார்பேட்டை அருகே காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் காயம்

ஜோலார்பேட்டை அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-22 22:30 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே வக்கனம்பட்டியில் பழையூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் காளைவிடும் திருவிழா நடத்தப்படும். இந்த முறை 75-வது ஆண்டு என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனையொட்டி பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு அதற்குள் காளைகள் ஓடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு நிபந்தனைகளை விழாக்குழுவினர் ஏற்றுக்கொண்டதன்பேரில் விழா நடத்த வருவாய்த்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.

அதன்படி திட்டமிட்டபடி விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலிருந்தும் 200 காளைகள் வேன்கள், சரக்கு ஆட்டோக்கள் மூலம் கொண்டு வரப்பட்டிருந்தன. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக வீடுகளின் மாடிகளிலும் திரளானோர் திரண்டிருந்ததோடு மரங்களின் மீதும் இளைஞர்கள் ஏறியிருந்தனர்.

கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகள் மின்னல் வேகத்தில் புழுதி பறக்க சீறிப்பாய்ந்து ஓடின. அவற்றை தொடுவதற்காக இளைஞர்கள் முன்னேறி வந்தனர். அவர்களை விழா கமிட்டியினர் எச்சரித்த வண்ணம் இருந்தனர். காளைகள் வேகமாக ஓடுவதற்காக பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். 200 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதனிடையே காளைகளை இளைஞர்கள் தொட முயன்றபோது மிரண்ட காளைகளில் சில காளைகள் கூட்டத்தினர் மீது பாய்ந்து முட்டின. இவ்வாறு முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

முதல் பரிசான ரூ.70 ஆயிரத்து 7-ஐ வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமாரின் காளை வென்றது. இரண்டாம் பரிசு முட்டம்பட்டி நரேந்திரன் காளை ரூ.50 ஆயிரத்து 5-ம், மூன்றாம் பரிசு மிட்டூர் மோகன்ரெட்டி காளைக்கு ரூ.40 ஆயிரத்து 4-ம் வென்றன. இந்த பரிசுகள் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

விழா நடைபெறுவதை திருப்பத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி உள்பட வருவாய்த்துறையினர் மேற்பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்