காட்பாடி அருகே குளிர்சாதன பெட்டி வெடித்து முன்னாள் ராணுவவீரர் உடல்கருகி பலி
காட்பாடி அருகே குளிர்சாதனப் பெட்டி வெடித்து முன்னாள் ராணுவவீரர் உடல் கருகி பலியானார்.
காட்பாடி,
காட்பாடி அருகே குளிர்சாதனப் பெட்டி வெடித்து முன்னாள் ராணுவவீரர் உடல் கருகி பலியானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காட்பாடி அருகே உள்ள லத்தேரி கண்ணதாசன்நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோசம் (வயது 60), முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு அமுலு, சூரியா என 2 மகள்கள் உண்டு. இருவருக்கும், திருமணமாகி விட்டது.
சந்தோசம் மற்றும் அவருடைய மனைவி லலிதாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள அமுலு வீட்டுக்குச் சென்றனர். 20-ந்தேதி சந்தோசம் மட்டும் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் கடைக்குச் சென்று பால் வாங்கி வந்துள்ளார். மாலை 4 மணியளவில் சந்தோசம் குளிர்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) திறந்துள்ளார்.
அப்போது குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக செத்தார். சந்தோசத்தின் வீட்டில் இருந்து புகை வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் சந்தோசம் உடல் கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.