கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 104 பேருக்கு ரேஷன்கார்டுகள்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின் நிறைவு நாளையொட்டி 104 பேருக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன.;
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், சோமாசிபாடி ஆகிய உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி 3 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவரிடம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை வழங்கினர். அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகள் மாநாடும் நடந்தது. தாசில்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன், தலைமையிட நில அளவர் சையத் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் 104 பேருக்கு புதிய ரேஷன் அட்டை, முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் 2 பேருக்கு விளக்கு பொறி சாதனமும், நுண்ணூட்டம் மற்றும் உயிர் உரம் ஆகியவை 10 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் விவசாய உற்பத்திக் குழுவிற்கான கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் ஒரு குழுவுக்கு ரூ.6 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான டிராக்டரும் நலத்திட்ட உதவியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், “3 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 844 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 104 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் ” என்றனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வயலூர் எம்.சதாசிவம், முத்தகரம் பழனிச்சாமி, சோமாசிபாடி சிவக்குமார், பொலக்குணம் சுப்பிரமணி, சிறுநாத்தூர் ராமசாமி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாலா, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) அன்பரசு, வருவாய் ஆய்வாளர்கள் விமலா, பர்வீன் பானு, முரளி, கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல துணை தாசில்தார் பரிமளா நன்றி கூறினார்.