நெல்லையில் பேராசிரியர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை,
நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கார் பிறப்பித்தார்.
பேராசிரியர் கொலைபாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நிலத்தகராறு காரணமாக இவருடைய மாமனார் கொடியன்குளம் குமாரை கொலை செய்ய வந்த கும்பல், அவரது வீட்டில் இருந்த பேராசிரியர் செந்தில்குமாரை குண்டு வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், நெல்லை வடக்கு தாழையூத்து சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரவின்ராஜ் (26), தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் தெருவை சேர்ந்த முனியசாமி (41), நெல்லை பழையபேட்டை நாடார் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மொட்டையன் என்ற மொட்டையசாமி (25) ஆகிய 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம் பாய்ந்ததுஇந்த நிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) கபில்குமார் சரத்கார் நேற்று பிரவின்ராஜ், முனியசாமி, மொட்டையசாமி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீஸ் அதிகாரிகள் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 3 பேரிடம் வழங்கினர்.