கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-05-22 23:00 GMT
கிருஷ்ணகிரி,

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி, கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கநாதன் மற்றும் பொருளாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட தலைவர் முனியப்பன் கூறியதாவது:-

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள 263 தபால் நிலையங்களில் பணியாற்றும் 573 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால், தபால் பட்டுவாடா, அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வசூல், ஏ.டி.எம்., பான்கார்டு போய் சேருவது முடங்கி உள்ளது. முக்கிய தபால்கள் சென்று சேருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனே ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பி-3 கோட்டத்தலைவர் ராமமூர்த்தி, கோட்டச் செயலாளர் செந்தில், கோட்டப்பொருளாளர் சத்தியபூங்குன்றன், பி-4 கோட்டத்தலைவர் ராமமூர்த்தி, கோட்டச் செயலாளர் மணி, கோட்டப்பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்