தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.

Update: 2018-05-22 21:00 GMT

நெல்லை, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.

இது குறித்து அவர் பாளையங்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வணிகர்கள் போலீஸ் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பல்வேறு அமைப்பினர்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதில் 10 பேர் பலியாகி உள்ளனர். 65–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

கடையடைப்பு

இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் வணிகர்கள் 3 நாட்கள் கடையடைப்பு நடத்துகிறார்கள். தமிழகம் முழுவதும் 24–ந்தேதி(வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. பணத்தை கொடுத்துவிட்டு யாரையும் சுட்டுக்கொன்று விடலாம் என்ற நிலையை அரசு உருவாக்குகிறதோ? மக்கள் பிரச்சினைக்காக போராடி மக்களை சுட்டு கொன்றது போலீசாரின் காட்டு தர்பாரை காட்டுகிறது.

இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்–அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று மற்ற அரசியல் கட்சியினர் கூறுவது போல் நானும் கேட்டுக்கொள்கிறேன். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிர்வாகிகள் சாலமோன், அருள் இளங்கோ, இசக்கி, திருமலை முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்