கரூர் அருகே முனியப்பசாமி கோவிலில் குட்டி குடி திருவிழா

கரூர் அருகே பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவிலில் குட்டி குடி திருவிழா நடந்தது. மருளாளி ஆட்டு ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

Update: 2018-05-22 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நெரூர் வடபாகம் அருகேயுள்ள முனியப்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்த இடத்தில் முன்பு அரச மரமும், வேப்பமரமும் சேர்ந்து இருந்ததாகவும், இங்கு முனியப்பசாமியாக அமர்ந்து அருள்வாக்கு கூறுபவரிடம் மக்கள் தங்களது கஷ்டங்களை எடுத்துரைத்து குறிகேட்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். முனியப்பசாமியின் அருள்வாக்கு பலித்து தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவருக்கு கிடா ஆட்டு குட்டியினை படைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குட்டி குடி திருவிழா, காவிரி ஆற்றிலிருந்து வேல் எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. அப்போது முனியப்பசாமிக்கு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து பூஜை நடத்தப்பட்டது. பின்னர் மாலை கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

குட்டி குடி திருவிழா

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடி திருவிழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி முனியப்பசாமியாக வந்து அருள்வாக்கு சொல்லும் மருளாளிக்கு கால்களில் சலங்கை மணி கட்டி அலங்கரித்தனர். பின்னர் முனியப்பசாமியின் வேலினை எடுத்து கொண்டும், சலங்கைமணி கம்பினை எடுத்து கொண்டும் மருளாளி புறப்பட்டு முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். அப்போது இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட்டு பக்தர்கள் தயாரானார்கள். மேலும் கிடா ஆட்டு குட்டிக்கு மாலையிட்டு பலிகொடுக்க வைத்திருந்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

பின்னர் சாமி ஆடி கொண்டே ஆக்ரோஷமாக வந்த மருளாளி, பலியிடப்பட்ட ஆட்டு குட்டியினை வாயில் வைத்து ரத்தம் குடித்தார். அப்போது பக்தர்கள் முனியப்ப சாமியே... நீ தான் காத்தருள வேண்டும்... என மனமுருகி வேண்டியதை காண முடிந்தது. பின்னர் தாம்பூலத்தட்டில் வைத்திருந்த தேங்காயினை உடைத்து படைத்தனர். மேலும் புனிதநீரை மருளாளியின் மீது ஊற்றினர். பின்னர் பக்தர்களுக்கு மருளாளி அருள்வாக்கு கூறி விபூதியை பூசி விட்டார். குட்டி குடி நிகழ்ச்சி முடிந் ததும் கோவிலில் முனியப்ப சாமிக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கரூர் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது. 

மேலும் செய்திகள்